நூலாசிரியர்கள்

தேனி மு.சுப்பிரமணி

thenimsubramani

தந்தை பெயர்சு. முத்துசாமி
தாய் பெயர்மு. கமலம்
மனைவி பெயர்உ. தாமரைச்செல்வி
மகள் பெயர்மு. சு. முத்துக்கமலம்
பிறந்த நாள்01-05-1967

     தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த மு.சுப்பிரமணி, பழனிசெட்டிபட்டி, பழனியப்பா வித்தியாலயம் பள்ளியில் தனது ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியையும், பழனியப்பா உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புக் கல்வியையும், தூத்துக்குடி, எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் முடித்த இவர் மேல்நிலைக் கல்விக்குப் பின், தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் மின்சாரப் பணியாளர் சான்றிதழ் பயிற்சி பெற்று, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழக ஆலையில் ஒரு ஆண்டு காலம் மின்சாரப் பணியாளருக்கான தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்றார். அதன் பிறகு பல்வேறு தனியார் நூற்பாலைகளில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றி வந்த இவர், மின்சாரப் பணி மேற்பார்வையாளருக்கான தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, மின்சாரப் பணி மேற்பார்வையாளராகப் பணி உயர்வும் பெற்றார். இதற்கிடையில், தொலைநிலைக் கல்வியின் மூலம் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருந்த நிலையில், 1998 ஆம் ஆண்டில் தேனியிலுள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றின் தொடக்கக் காலப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மேலாளராகப் புதிய பணியில் சேர்ந்தார். கல்லூரிப் பணியில் தன்னுடைய செயல்பாடு மற்றும் பணித் திறனின் மூலம் கல்லூரியின் மேலாளர், நிர்வாக மேலாளர் என்று பணி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து கல்லூரிச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையிலும் பணியாற்றினார். கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2007 ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறினார்.

     இதனைத் தொடர்ந்து, இவர் 2006 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தொடங்கிய முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார். இதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அறியப்பட்டப் பன்னாட்டுத் தமிழ் இணைய இதழாகவும் (ISSN: 2454 - 1990), இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் (UGC (India) Approved List of Journal (No:64227) in Tamil) ஒன்றாகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

     2008 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து தனது பங்களிப்புகளின் மூலம் நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள் தொடக்கம் மற்றும் 23 ஆயிரம் தொகுப்புகள் செய்து தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களிப்பு செய்யும் முதல் 100 நிலைகளுக்கான தரப்பட்டியலில் 11 வது நிலையில் இருந்து வருகிறார்.

     1983 முதல் தமிழ்ப் பத்திரிகைகளில் துணுக்குகள் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு பத்திரிகைகளில் 4000க்கும் அதிகமான துணுக்குகள், சிரிப்புகள், 600க்கும் அதிகமான பொதுக் கட்டுரைகள், நேர்காணல்கள், 100க்கும் அதிகமான கணினி, இணையம் தொடர்பான கட்டுரைகள், 22 சிறுகதைகள், 260க்கும் அதிகமான புதுக்கவிதைகள் என்று எழுதியிருக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

வெளியான நூல்கள்

தமிழில் இவர் எழுதிய நூல்களில் இதுவரை ஒன்பது நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் (மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், நவம்பர், 2010)
2. தமிழ் விக்கிப்பீடியா (மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், நவம்பர், 2010)
3. சுவையான 100 இணையதளங்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை, டிசம்பர், 2010)
4. மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை, ஆகஸ்ட், 2011)
5. மகளிருக்கான 100 இணையதளங்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை, நவம்பர், 2011)
6. அதிசயங்கள்! உலக அதிசயங்கள்! (தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை, சூலை, 2012)
7. அற்புத மகான்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை, டிசம்பர், 2013)
8. இந்திய தேசியப்பூங்காக்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை, டிசம்பர், 2014)
9. உலகச் சிறப்பு தினங்கள் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், ஏப்ரல், 2015)

     இவர் ‘தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்றார்.


bestbookaward

சுவையான 100 இணையதளங்கள் மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் மகளிருக்கான 100 இணையதளங்கள் அற்புத மகான்கள் இந்திய தேசியப்பூங்காக்கள்
அமைப்புகளில் தற்போதைய பொறுப்புகள்

1. செயற்குழு உறுப்பினர், கணித்தமிழ்ச் சங்கம் (மதுரைக் கிளை) (பிப்ரவரி’ 2012 முதல்...)
2. செயலாளர், சங்கம் தமிழ் அறக்கட்டளை (Sangam Tamil Foundation), சென்னை. (பதிவு எண்: 538/2012) (ஆகஸ்ட் 30, 2012 முதல்...)
3. தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) (செப்டம்பர் 27, 2017 முதல்...)

அமைப்புகளில் முன்பு வகித்த பொறுப்புகள்

1. துணைச் செயலாளர், பாரதி கலை - இலக்கிய மன்றம், தூத்துக்குடி (1983 - 1992)
2. செயற்குழு உறுப்பினர், நெல்லை, வ. உ. சி மாவட்ட துணுக்கு எழுத்தாளர் சங்கம் (1983 - 1989)
3. அமைப்பாளர், வ. உ .சி. வெள்ளிமணி இளந்தளிர் மன்றம், தேனி (1986 - 1989)
4. மாநிலச் செயற்குழு உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் பேரவை (நீலகிரி) (1987 - 1990)
5. உறுப்பினர், தேனி இலக்கியப் பணி மன்றம், தேனி (1988 - 1990)

தமிழ் இணைய மாநாட்டுப் பங்களிப்புகள்

1. தமிழ்நாடு அரசு, 2010 சூன் மாதம் கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்தியது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி ஒன்று நடத்தப் பெற்றது. இப்போட்டிக்காகத் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் குழு உறுப்பினராகப் பங்கேற்பு.

2. தமிழ்நாடு அரசு, 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் கோயம்புத்தூரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்திய ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் “தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள்” எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் “தமிழ் விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம்” எனும் தலைப்பில் கட்டுரை வாசிப்பு.

3. தமிழ்நாடு அரசு, 2010 ஆம் ஆண்டு சூன் கோயம்புத்தூரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்திய ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் “கணினி மொழியியல்” எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் மென்பொருள் வல்லுநர் சென்னை, பத்ரி சேசாத்திரி தலைமையில் நடைபெற்ற “வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல்” நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் பங்கேற்று அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பங்களிப்பு.

tamilinternetconference

கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள்

     தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப் பெறும் இளம் படைப்பாளர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” வழியாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேர்வு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு இணையத் தமிழ் எனும் தலைப்பில் பயிற்சியளித்திருக்கும் இவர் தமிழ் வளர்ச்சித்துறையின் ஆட்சிமொழிக் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார்.

     தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் இணையத்தில் தமிழ்ப் பங்களிப்புகள் குறித்த கருத்தரங்கம், பயிலரங்கம் போன்றவைகளில் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். இயல், இசை, நாடகம் எனும் மூன்று தமிழ்களையும் தனக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ள இணையத் தமிழில் பங்களிப்புகளை அதிகப்படுத்தி, உலகின் பல்வேறு மொழிகளைத் தனக்குள்ளாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இணையப் பரப்பில் தமிழை முதன்மைப்படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

     கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறுவிலுள்ள எக்செல் பன்னாட்டுப் பள்ளி (Excel Global School), எக்செல் மத்தியப் பள்ளி (Excel Central School), எக்செல் மேல்நிலைப் பள்ளி (Excel Higher Secondary School) எனும் மூன்று பள்ளிகளை உள்ளடக்கிய எக்செல் பள்ளிகளில் 10-08-2013 அன்று நடைபெற்ற மாணவர் மன்றங்கள் தொடக்க விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்தியாவின் முதல் விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு.

wikipediaclubinaguration

பாராட்டுச் சான்றிதழ்கள்/விருதுகள்

1. தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் தேனி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய 42-வது தேசிய நூலக வார விழாவில் வழங்கிய இணைய இதழியலுக்கான கலை - இலக்கிய சாதனையாளர் சான்றிதழ் (2009)

2. தமிழ்த்திணை இணைய இதழ் (www.tamilthinai.com) ஐந்தாம் ஆண்டு விழாவில் வழங்கிய தமிழ்ப் பணியைப் போற்றும் வகையிலான தமிழ்த்திணை விருது. (2010)

3. தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய கலை இலக்கியத் துறையில் கட்டுரை, இணைய இதழியல் ஆகிய தளங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் (2011)

4. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு சிறந்த நூல்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட நூல்களுள் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் (2012)

5. சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் இணைந்து மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடத்திய “இலக்கியம், கல்வி வளர்ச்சியில் (மலேசியா, சிங்கப்பூர்) தமிழ் ஊடகங்கள்” எனும் தலைப்பிலான 6வது இதழியல் பன்னாட்டுக் கருத்தரங்கம் வழியாக வழங்கப்பட்ட இணையத் தேனீ விருது. (2014)

6. போடிநாயக்கனூர் ஆவடையம்மாள் அறக்கட்டளை இணையத் தமிழ்ப் பங்களிப்புகளுக்காக வழங்கிய ரூ 5000/ பரிசுத்தொகையுடனான பாராட்டுச் சான்றிதழ் (2014)

7. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை எனும் அமைப்பு பத்தாண்டுகளாகத் தமிழில் முத்துக்கமலம் இணைய இதழ் நடத்தி அதன் வழியாகத் தமிழ்ச் சேவையாற்றி வருவதைப் பாராட்டி வழங்கிய “படைப்பாக்க மேன்மை விருது” (2015)

8. தேனி, முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் வழங்கிய கணினித் தமிழ்ச் சாதனையாளர் விருது (2015).

9. தேனி, வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணையத் தமிழ்ச் சேவைக்கான கணினித் தமிழ் விருது (2017)

10. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை நடத்திய சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறந்த படைப்பாளருக்கான சிந்தனைச் சிகரம் விருது (2017)