கி.தனவேல், இ.ஆ.ப. (பணி நிறைவு)
சொந்த ஊர் | புதுக்கூரைப்பேட்டை, கடலூர் மாவட்டம் |
பிறந்த இடம் | நெய்வேலி (பழைய கூரைப்பேட்டை) , கடலூர் மாவட்டம் |
பிறந்த நாள் | மார்ச் 14, 1956 |
குடும்பம் | வேளாண்மைக் குடும்பம் |
தொடக்கக் கல்வி | புதுக்கூரைப்பேட்டை தொடக்கப்பள்ளி |
உயர்நிலைப்பள்ளி | அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, விருத்தாசலம் |
புதுமுக வகுப்பு (பி.யூ.சி) | கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் (1972) |
பி.எஸ்ஸி , வேதியியல் | பச்சையப்பன் கல்லூரி, சென்னை (1973-76) |
சட்டப்படிப்பு (பி.எல்) | சென்னை சட்டக் கல்லூரி (1976-79) |
எம்.ஏ (தமிழ் இலக்கியம்) | மதுரை காமராசர் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வி |
எம்.பி.ஏ | இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் |
(இவர் தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் “தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மை விரிவாக்கம்” என்ற தலைப்பில் பி.எச்.டி பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றார்)
இவர் தொடக்கத்தில் இந்தியன் வங்கியில் காசாளராகச் சேர்ந்து பணியாற்றி வங்கி அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மொத்தம் ஆறு ஆண்டு காலம் (1979-85) வங்கிப் பணியாற்றியுள்ளார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப்-1) துணை ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்டு 1985 ஆகஸ்ட் மாதம் துணை ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது அரசுப் பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இவர் பின்வரும் பதவிகளை வகித்து வந்துள்ளார்.
1. வருவாய்க் கோட்ட அலுவலர், நாமக்கல் மாவட்டம்
2. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
3. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், வேலூர் மாவட்டம்
4. முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்
5. மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்
6. தனி அலுவலர், கூட்டுறவு சர்க்கரை ஆலை , அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்
1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு (1992 தொகுதி) சென்னை வணிக வரித்துறையில் துணை ஆணையராகப் பதவி ஏற்றார். இவர் 1998 முதல் 2001 வரை 3 ஆண்டுகளுக்கு மேல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி வகித்தார். அதன் பின்னர் பின்வரும் உயர் பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.
1. அரசுச் செயலாளர், வருவாய்த்துறை
2. அரசுச் செயலாளர், பொதுப்பணித்துறை
3. அரசுச் செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
4. இணை ஆணையர், வருவாய் நிர்வாகம், சென்னை
5. இயக்குநர், தோட்டக் கலைத் துறை, சென்னை
6. அரசு இணைச் செயலாளர், கூட்டுறவுத் துறை
7. உறுப்பினர் செயலாளர், மாநிலத் திட்டக் குழு
8. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
மேலும், இவர் நடுவண் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களின் தனிச்செயலாளராக 2004 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார்.
இவர் கல்லூரி நாட்களில் கவியரங்கம் மற்றும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வாசிப்பது, இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற காலத்தில் சென்னையில் நடைபெற்ற அனைத்து கல்லுhரி அளவிலான பேச்சுப் போட்டிகளிலும், கவிதைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.
இவர் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, மலோசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 21 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து முப்பதுக்கும் மேற்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களைப் பார்வையிட்டுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் ‘ஹார்வார்டு‘ பல்கலைக் கழகத்தில் குறுகிய கால மேலாண்மைப் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் அரசு அலுவலராகப் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய காலத்தில் கிராமப்புற வளர்ச்சியிலும், வேளாண்மை வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளார். மேலும், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர்களின் நலனில், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தஞ்சாவூரில் (1995) நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த இவர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக ஆற்றிய பங்களிப்பு அரசு மற்றும் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு வழிவிடுங்கள் 1996 இல் வெளிவந்தது. மேலும், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையங்கள் மூலம் இவரது இலக்கிய உரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர், முன்னாள் துணை வேந்தர்களான முனைவர் க.ப. அறவாணன், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஒளவை நடராசன், முனைவர் பொற்கோ ஆகியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். தென்காசி திருவள்ளுவர் கழகத்தினரால் இவருக்கு ‘தமிழ் முகில்’ என்ற பட்டம், முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் வழங்கப்பட்டது.
இவர் பெற்றுள்ள விருதுகள்
1) தமிழ் தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையில் நடைமுறைக்குத் தேவையான பல்வேறு குறியீடுகள் இல்லாத நிலையை ஆராய்ந்து இவர் அரசுக்கு அனுப்பிய கருத்துரு ஏற்றுக் கொள்ளப்பட்டு 1997 - ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று (15-1-1997) இவருக்கு தமிழக அரசின் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவரது ஆராய்ச்சிப் பரிந்துரை தமிழக அரசால் ஏற்கப்பட்டு அரசாணை மூலம் தமிழ் தட்டச்சுப் பொறிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது பெருமைப்படத்தக்கது.
(“தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்துக்கு உறுதுணை புரியும் வகையில் தணியா ஆர்வத்துடன் தனி ஒருவராக முயன்று தமிழ் எழுத்துச் சீரமைப்பினால் வழக்கொழிந்த குறியீடுகளை நீக்கி நடைமுறையில் வேண்டப் பெறும் குறியீடுகளைத் தட்டச்சுப் பொறியில் இடம்பெற வழிகோலிய இந்திய ஆட்சிப் பணித் தொகுதி அலுவலர் திரு கி. தனவேல் அவர்களைத் தமிழ்நாடு அரசு பாராட்டுகிறது.
திரு கி. தனவேல் அவர்களின் இத்தமிழ்ப்பணியைப் போற்றுவதுடன், ஊக்கப் பரிசுத் தொகையாக ரூபாய் பத்தாயிரத்தையும், இச்சான்றிதழையும் தமிழ்நாடு அரசு மகிழ்வுடன் வழங்குகிறது.”)
2) இளைஞர் நலத்திற்காக இவர் ஆற்றிய சேவைக்காக, 12.01.2000 அன்று நடந்த (இளையோர் எழுச்சி ஆண்டு 2000) தேசிய இளையோர் தினவிழாவில் நெல்லை வடக்கு ரோட்டரி சங்கம் இவருக்கு “இளைய பாரதி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.
3) தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தின் மூலம் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு புகட்டும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தினை திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இவருக்கு 1999 - 2000 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷய்யா விருது வழங்கப்பட்டது.
4) இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் (1998-2001) அரசுத் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக அந்நாள் முதலமைச்சர் அவர்களால் இவருக்கு ஐந்து விருதுகள் (சிறந்த மாவட்ட ஆட்சியர்) வழங்கப்பட்டுள்ளன.
5) 2010-ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அலுவல் சார்ந்த மேற்பார்வைப் பணியில் இவரது பங்களிப்பிற்காக தமிழக அரசால் பாராட்டப்பட்டுள்ளார்.
இவரது இலக்கியப் பணி
இவர் இதுவரை ‘வழிவிடுங்கள்’, ‘செம்புலச் சுவடுகள்’, ‘ஊமைச் சங்கு’ உள்ளிட்ட ஆறு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அரசுப் பணிக்கு இடையில் இலக்கியப் பணியினையும் ஆர்வத்துடன் தொடர்ந்து வந்த இவர் கண்ணியம் இலக்கிய இதழில் ‘தமிழ் இலக்கியம் காட்டும் தலைமைப் பண்புகள்’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிவரும் இவர் இதுவரையில் 500க்கும் மேற்பட்ட இலக்கியச் சொற்பொழிவுகளையும், 300க்கும் மேற்பட்ட ஊக்கச்சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
அரசுப் பணி நிறைவு
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அரசுச் செயலாளராகப் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் (30.06.2014) பணிநிறைவு பெற்றுள்ளார்.